×

சபரிமலையில் இன்று காலை முதல் ஏலக்காய் இல்லாத அரவணை பாயசம் விற்பனை

திருவனந்தபுரம்: சபரிமலை பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் அரவணை பாயசத்தில் தரமில்லாத ஏலக்காய் பயன்படுத்துவதாக கூறி, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை பரிசீலித்த அனில் கே. நரேந்திரன், அஜித்குமார் ஆகியோர் அடங்கிய தேவசம் போர்டு பெஞ்ச், இது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. அதன்படி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரவணை பாயசத்தில் பயன்படுத்தும் ஏலக்காயில் குளோரோ பைரிபோஸ், பிப்ரோனில், டெப்யுகனசோல், இமிடக்லோபிரிட் உள்பட 14 வகையான பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அரவணை பாயச விற்பனைக்கு உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தடைவிதித்தது.

இனிமேல் தரமுள்ள ஏலக்காயை பயன்படுத்தி அரவணை தயாரிக்க வேண்டும் என்றும், அதுவரை ஏலக்காய் இல்லாமல் தயாரிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாலை 5 மணி முதல் அரவணை பாயச விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று சபரிமலை வந்த பக்தர்கள் அரவணை பாயசம் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஏற்கனவே 6.50 லட்சம் டின் அரவணை தயாரித்து வைக்கப்பட்டிருந்தது. இவற்றை விற்பனை செய்ய முடியாததால் தேவசம் போர்டுக்கு ₹6.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்றே ஏலக்காய் இல்லாமல் அரவணை தயாரிக்கும் பணி தொடங்கியது. இன்று காலை முதல் ஏலக்காய் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அரவணை பாயச விற்பனை தொடங்கியது.

திருவாபரண ஊர்வலம்

சபரிமலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜைக்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது. இதனால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது. நேற்று பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் நடந்தது. இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கிருந்து தரிசனத்திற்காக சபரிமலைக்கு புறப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் மகரஜோதியை தரிசித்த பின்னரே ஊர் திரும்புவார்கள். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்ரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த திருவாபரணம் பந்தளம் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும்.

இதற்கிடையே இன்று மதியம் ஒரு மணி அளவில் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து திருவாபரண ஊர்வலம் சபரிமலையை நோக்கி புறப்படுகிறது. முன்னதாக இன்று அதிகாலை 5 மணி முதல் பந்தளம் சாஸ்தா கோயிலில் திருவாபரணம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு திருவாபரணத்தை தரிசனம் செய்தனர். மதியம் ஒரு மணி அளவில் பந்தளம் மன்னர் பிரதிநிதி ராஜராஜ வர்மா தலைமையில் திருவாபரண ஊர்வலம் புறப்படுகிறது.

Tags : Sabarimala , Aravani payasam without cardamom is on sale at Sabarimala from this morning
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...